கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் இல்லை.-முதல்வர் விக்கி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2016 (வியாழக்கிழமை)
கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உதவி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 62 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) கைதடியில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 16 ஆம் திகதி இரவு கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ பரவி பெரும் அழிவுகளுக்கு உள்ளாகியிருந்தது. இதனை கேள்விப்பட்டு, மறுநாள் குறித்த சந்தைக்கட்டட தொகுதிக்கு நான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடனும் கலந்துரையாடியிருந்தோம்.
அவர்கள் இந்த அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொருவரும் பல இலட்சம் ரூபா வரை நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டிய தேவை எம் அனைவருக்கும் உண்டு. இந்த அனர்த்தத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தி யிருந்தோம்.
அவர் கொழும்பு சென்றவுடன் பதிலளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. மேலும் இந்த அனர்த்தம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம். வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் அவரிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
இதேவேளை இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் தாம் பெற்ற வங்கி கடன்களை மீள செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். குறித்த வர்த்தகர்களிற்கு வழங்கிய கடன்களை செலுத்துவதற்கு அடுத்து வரும் இரு வருடங்களுக்கு மேலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஊடாக விடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடி வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரியுள்ளார்