காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டபடி, நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது காவிரிப் பிரச்சினையில் இன்னொரு முக்கியத் திருப்பமாகமாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரம், காவிரி நதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நாளை புதன்கிழமை முதல் 27-ம் தேதி வரை தினசரி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற உத்தரவை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது தவறு என்றும், நான்கு வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 6-ம் தேதி, உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு அது 12 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
திங்கட்கிழமை, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவின்படி, கர்நாடகம் தினசரி 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை இம்மாத இறுதி வரை திறக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், கர்நாடகத்துக்கு குடிநீருக்காகவே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில், தண்ணீர் திறக்க முடியாது என்றும், அவ்வாறு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் வாதிட்டார்.
தமிழக அரசின் தரப்பில் வாதிட்ட சேகர் ஆஃப்தே, குடிநீருக்கே பற்றாக்குறையாக உள்ளதாகக் கூறி கர்நாடகம் தொடர்ந்து வாத்த்தை முன்வைப்பதாகவும், ஆனால் அது நீர்ப்பாசனத்துக்காக பெருமளவு தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். 24 டிஎம்சி நீர் பாசனத்துக்குப் பயன்படுத்துவதை தலைமைச் செயலரே ஒப்புக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தில் பீதியைக் கிளப்புவதற்காக பல தவறான தகவல்களைத் தருவதாகவும், அதற்கு நீதிமன்றம் பணிந்துவிடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வரும் நிலையில், அதை தள்ளிப்போட முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், தாங்கள் உத்தரவிடக்கூடாது என கர்நாடகம் கூறிய வாதத்தை நிராகரித்தனர்.
அதே நேரத்தில், காவிரி நடுவர் மன்ற உத்தரவை எப்படி அமல்படுத்துவது என்ற கோணத்தில் செயல்படாமல் காவிரி மேற்பார்வைக்குழு தவறாக செயல்படுகிறது என்றும், அவர்களே ஒரு உத்தரவும் போடுகிறார்கள் என்றும் நீதிமன்றம் விமர்சித்தது.
இரு மாநிலங்களும், தேவைப்பட்டால் மேற்பார்வைக்குழு உத்தரவுக்கு எதிராக மூன்று நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.