17 நாட்களாக நடைபெற்ற உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. அமெரிக்கா பதக் கப்பட்டியலில் 46 தங்கம் உட்பட 121 பதக்கங்களை குவித்து 17-வது முறையாக முதலிடம் பிடித்தது. இந்தியா இரு பதக்கங்களுடன் 67-வது இடத்தை கைப்பற்றியது.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம் பிக் போட்டி கடந்த 5-ம் தேதி கோலா கலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திரு விழாவான இந்த ஒலிம்பிக் போட்டி யில் 207 நாடுகளை சேர்ந்த 11,544 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
நிறைவு விழா
கடந்த 17 நாட்களாக நடைபெற்ற இந்த திருவிழா நேற்றுடன் நிறை வடைந்தது. இதனையொட்டி மரக் காணா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. பிரேசில் நாட்டுக் கலைஞர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். ஒவ் வொரு நாட்டு வீரர்களும் தங்களது நாட்டின் கொடிகளை ஏந்திச் சென்றார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்லும் கவுரவம் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்குக்கு அளிக்கப்பட்டது.
மகளிர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்தார் சாக்ஷி. அவரைக் கவுரவிக்கும் விதமாக அணி வகுப்பில் கொடியேந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஜப்பான் நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நிறைவுவிழாவில் நடைபெற்றன.
2020-ல் டோக்கியோ ஒலிம்பிக்
ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கினார். அந்தக் கொடி யை அடுத்த ஒலிம்பிக் நடைபெற உள்ள டோக்கியோ நகரின் ஆளு நர் யூரிகோ கொய்கோவிடம், சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் ஒப்படைத்தார். பிறகு, அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்து வைத்தார். ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைக்கப் பட்டது.
அமெரிக்கா முதலிடம்
இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 39 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது. முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையை தொடங்கிய அமெரிக்கா 17-வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. நீச்சல், ஜிம்னாஸ்டிக், தடகள போட்டிகளில் அமெரிக்க நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தியதால் முதலிடத்தை கைப்பற்ற முடிந்தது.
இங்கிலாந்து 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. 26 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என 70 பதக்கங்களுடன் சீனா 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய பிரேசில் 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 13-வது இடத்தை பிடித்தது.
இந்தியாவுக்கு 67-வது இடம்
இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67-வது இடம் பிடித்தது. கடைசி நாளில் மல்யுத்தம், மாரத்தான் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கலந்து கொண்டனர்.
அதிகமானோர் பங்கேற்றதால் கடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிடுகை யில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வின் பதக்க எண்ணிக்கை இரட்டிப் பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையில் பாதியைக் கூட வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நழுவிய பதக்கம்
ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா, 0.5 புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். மகளிருக்கான ஜிம்ஸ்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில் 0.150 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார் திபா கர்மாகர்.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்து வெண்கலப் பதக் கத்தை கோட்டைவிட்டது. தடகளத் தில் 36 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ஒரே வீராங்கனை யான லலிதா பாபர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல தவறினார்.
ஏமாற்றிய நட்சத்திரங்கள்
இந்தியா சார்பில் இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாட் மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெவால், ஜுவாலா கட்டா, அஷ் வினி பொன்னப்பா, டென்னிஸ் நட் சத்திரங்கள் லியாண்டர் பயஸ், போபண்ணா, துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் ககன் நரங், ஜிது ராய், ஹீனா சித்து, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், குத்துசண்டை வீரர்கள் ஷிவா தாபா, விகாஷ் கிர்ஷன், கோல்ப் வீரர் அனிருபன் லஹிரி ஆகியோர் ஏமாற்றினர். ஆடவர் ஹாக்கியில் கால் இறுதியில் தோல்வியை சந்தித்தது.
பிரதமர் வாழ்த்து
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘ட்விட்டரில்', ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். எல்லா வீரர்களுமே சிறந்த பங்களிப்பை வழங்கினர். ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்திய பிரேசிலுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.