துருக்கி நாட்டில் திருமண விழாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
துருக்கியின் காஸியன்டெப் மாகாணத்தில் பெய்பஹ்ஸ் என்ற இடத்தில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 30 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 94 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அந்தப் பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்ததாகவும், அவற்றின் ஜன்னல்கள், கதவுகள் தூள், தூளாகியதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறின. இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் எங்கு பார்த்தாலும் ரத்தக்களறியாக காணப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர்.
இந்த தாக்குதல் தொடர்பாக காஸியன்டெப் மாகாண கவர்னர் அறிக்கை வெளியிட்டு உள்ள அறிக்கையில் திருமண விழாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 73 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலால் திருமண விழா, துக்க விழாவாக மாறிப்போனது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்றும், ஐ.எஸ். இயக்கத்தினர்தான் இந்த வெறிச்செயலை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த துருக்கி அதிபர் எர்டோகன், இந்த தற்கொலைப்படை தாக்குதலை ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது போன்ற தாக்குதல்களின் நோக்கம், அரேபியர்கள், குர்துகள், துருக்கியினர் என பல தரப்பினர் மத்தியில் பிரிவினைவாத விதையைத் தூவி, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் அவர்களை (மோதல்களுக்கு) தூண்டிவிடுவதுதான் எனவும் அவர் கூறினார்.