தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அரசின் குடியுரிமை இல்லாமல், படித்துவந்த இலங்கை அகதிகளின் 55 குழந்தைகள் பாடசாலைகளில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கியூ பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
"பிரைட் சொசைட்டி´ என்ற தொண்டு நிறுவனத்தை இலங்கையைச் சேர்ந்த ஞானசேகரன் தலைவராகவும், ஞானதீபன் செயலராகவும் இருந்து நடத்தி வந்தனர். பெங்களூரில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், காலாவதி திகதி முடிவடைந்ததால், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் இந்த நிறுவனத்தை இடம் மாற்றம் செய்து நடத்திவந்தனர்.
இலங்கை உள்நாட்டு போரில், பெற்றோரை இழந்த குழந்தைகள், தமிழகம், கர்நாடக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளின் குழந்தைகள் உள்ளிட்ட 55 குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.
இந்த குழந்தைகள், அச்சிறுப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டனர்.
இங்கிருந்தவாறு, இக் குழந்தைகள் அச்சிறுப்பாக்கம், செண்டிவாக்கம் உள்ளிட்ட அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று வந்தனர். இவர்கள் வழங்கிய சான்றிதழ்களில் குடியுரிமை சான்று இல்லை என்பதால் அவர்களை பாடசாலை நிர்வாகத்தினர், வெள்ளிக்கிழமை நீக்கம் செய்தனர்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை கியூ பிரிவு பொலிஸார், அச்சிறுப்பாக்கத்துக்கு வந்து, கடந்த இரு நாட்களாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.