யாழ்ப்பாணம் குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று ஞாயிற்றுக் கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.நாவாந்துறை மரியன்னை ஆலய பங்கு மக்களின் கடின உழைப்பினாலும் முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி இராஜசிங்கம் அடிகளாரின் உழைப்பினாலும் குருசடி தீவில் கடல் மார்க்கமாக அனைத்துப் பொருட்களும் எடுத்துச் சென்று கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு கடல் மார்க்கமாக யாத்திரிகர்கள் பயணம் செய்தனர்.
அதற்கான சகல ஏற்பாடுகளையும் புதிய பங்குத்தந்தை அருட்பணி அன்ரனி பாலா தலைமையில் பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இம்மாதம் 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நற்கருணைத் திருவிழாவும் நேற்றைய தினம் திருநாள் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் அருட்பணி ஜெபரெட்ணம் அடிகளார் மற்றும் அருட்பணி ஸ்ரோபன் அடிகளார் பங்குத்தந்தை அருட்பணி அன்ரனிபாலா அடிகளார் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
இதன் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் புனித அந்தோனியாரின் புனித சொரூபம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு. அதன் பின்னர் இறுதி ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.