125 கோடி இந்திய மக்களும் சாவல்களை சந்திக்க தயார் -
பிரதமர் நரேந்திரமோடி உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2016 (திங்கட்கிழமை)
நாட்டின் 70-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். முப்படைகளின் தளபதிகளும் பங்கேற்றுள்ளனர்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றி வருகிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். நமக்கு சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை. இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் லட்சக்கணக்கானோரின் தியாகம் உள்ளதாக குறிப்பிட்டார்.
அம்பேத்கர், மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், நேரு ஆகியோரின் தியாகங்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். ஏராளமான சவால்களை எதிர்கொள்ளும் திறன் 125 கோடி இந்தியர்களிடமும் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது நமது கடமை என்றும் கூறினார். இந்திய குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே நல்லாட்சிக்கான அர்த்தம் என்றார். ஒரே இந்தியா கனவை நனவாக்குவோம் என்ற மோடி, நமக்கு முன் பல்வேறு சவால்கள் உள்ளன என்றும் அவற்றை சந்திக்கும் திறன்களும் உள்ளன என்றும் கூறினார்.
மேலும், கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி தற்போது 3 நாட்களில் திருப்பி தரப்பட்டு வருகிறது என்றார். மக்களின் தேவைகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றார். சுதந்திரம் சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்ற அவர், கடந்த கால ஆட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் தற்போதைய ஆட்சி மீது எதிர்பார்ப்புகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறையை கணினி மயமாக்கி அத்துறையை மேம்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த 2 ஆண்டுகளில் 10,000 கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 60 வாரங்களில் 4 கோடி பேருக்கு தமது ஆட்சியில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.