கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 41.
தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ''ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்'' பாடலுக்காக தேசிய விருது பெற்றார். சைவம் படத்தில் ''அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே'' என்ற பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார். 2005ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் திரைப்பாடல்கள் 1500ஐ தாண்டும். அதிகபட்சமாக 2012ம் ஆண்டில் மட்டும் இவர் 103 பாடல்களை எழுதி உள்ளார். க்ரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு), அனா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
1975ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார். நா.முத்துக்குமாருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தொடக்கத்தில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அவர், வீரநடை படத்தின் மூலம் பாடலாசியராக அறிமுகமானார்.