எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் துவைத்து எடுத்தது பிஜி.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2016 (வெள்ளிக்கிழமை)
ரியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ரக்பி செவன்ஸ் போட்டியில், பிஜி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் துவைத்து எடுத்தது பிஜி.
முதல்பாதியில், பிரிட்டன் அணியை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல், 29-0 என்ற புள்ளிக்கணக்கில் பிஜி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில்தான், பிரிட்டன் அணி போராடி 7 புள்ளிகளை பெற்றது. இறுதியில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது பிஜி .
கடந்த 1956 ம் ஆண்டு முதல், ஒலிம்பிக்கில் பிஜி பங்கேற்று வருகிறது. 12 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றும் ஒரு முறை கூட பிஜி வீரர்கள் 'போடியம் 'ஏறியது கிடையாது. ஆனால் இந்த ரியோ ஒலிம்பிக்கில், அதுவும் தங்கப் பதக்கத்தையே கைப்பற்றி பிஜி பிரமிக்க வைத்துள்ளது. தென் பசிபிக் கடலில் உள்ள 300 தீவுக் கூட்டமான பிஜியின் மொத்த மக்கள் தொகை 10 லட்சம்தான்.
கடந்த 1924 ம் ஆண்டு, 15 வீரர்கள் விளையாடும் ரக்பி விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. பின்னர் ஒலிம்பிக்கில் இருந்து அது நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2009 ம் ஆண்டு, 7 பேர் கொண்ட ரக்பி செவன்ஸ் போட்டியை ஒலிம்பிக்கில் மீண்டும் சேர்க்க, ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்தது.
அதில் இருந்தே, ஒலிம்பிக் தங்கத்தை நோக்கி பிஜி ரக்பி அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. விடா முயற்சிக்கும் கடின உழைப்புக்கும், இப்போது அந்த குட்டி நாட்டு அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. உலகில், ரக்பி செவன்ஸ் விளையாட்டை தேசிய விளையாட்டாக கொண்ட ஒரே நாடு பிஜிதான்.