சீனாவில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தயாரிக்கப்பட்டுள்ள ‛டிராம் பஸ்' பரிசோதனை வெற்றி பெற்றது.
சீனாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பொது மக்களை முடிந்த அளவு பொது வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தி வரும் நிலையில், தற்போது ‛டிராம் பஸ்'சை அறிமுகப்படுத்தியுள்ளது. 72 அடி நீளம், 26 அடி அகலம் மற்றும் 16 அடி உயரம் கொண்ட இந்த பஸ்சில் 1,200 பயணிகள் வரை பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ‛டிராம் பஸ்'சின் சிறப்பு அம்சமே சாலை போக்குவரத்தை எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் பயணம் செய்வதே.
அதாவது சாலையில் இருபுறங்களிலும் தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் இந்த பஸ்கள் செல்லும் அவ்வாறு பஸ்கள் செல்லும் போது பஸ்சில் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குகை போன்ற அமைப்பு வழியாக ரோட்டில் செல்லும் வாகனங்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் தாராளமாக செல்லலாம். மேலும் இந்த பஸ் ஆங்காங்கே மேம்பாலம் போன்று அமைக்கப்படும் நிறுத்தங்களின் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்லும் வசதியுள்ளது.
தற்போது இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் ‛டிராம் பஸ்' சில நூறு மீட்டர்கள் ஓட்டி சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது ஸ்டார்ட் செய்வது, பிரேக் உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. முக்கிய தகவலாக சீனாவில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க அமைக்க திட்டமிட்ட சுரங்கப்பாதை அமைப்பதை விட பல மடங்கு குறைந்த செலவிலேயே இந்த பஸ்சை தயாரித்து விடலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது டிரைவருடன் இந்த பஸ் இயக்கப்படுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் டிரைவர் இல்லாமல் ஆட்டோமெட்டிக்காக இந்த பஸ்சை இயக்க வைக்க ஆராய்ச்சி நடந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.