ஜெ. என்னை அறைந்தார் : பாதுகாப்பு கேட்டு மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கதறல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2016 (திங்கட்கிழமை)
எம்பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி மிரட்டிய ஜெயலலிதா என்னை அறைந்தார்’’ என்று அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பரபரப்பாக பேட்டியளித்தார். ‘என் உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்று மாநிலங்களவையில், சசிகலா புஷ்பா கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பேச விடாமல் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை திமுக எம்பி திருச்சி சிவா, வீட்டுக்கு செல்ல முயன்றபோது அவருக்கும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னையில் போயஸ்கார்டனில் சசிகலா புஷ்பாவிடம் முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்தினார். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உடனிருந்தார். ஜெயலலிதாவுடனான சந்திப்புக்குப் பின் பரபரப்பும் பதற்றமுமாக சசிகலா புஷ்பா டெல்லி சென்றார். மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா எழுந்து பேசினார். அப்போது தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி கதறி அழுதார். அவரது பரபரப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை கூட்டம் முடிந்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா, ‘‘எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்தார். அப்போது சசிகலாவும் உடனிருந்தார்’’ என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். மாநிலங்களவையில் பரபரப்பு: மாநிலங்களவையில் நேற்று சசிகலா புஷ்பா பேசியதாவது: சம்பவத்தன்று சற்று உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்ததால் திருச்சி சிவாவுடன் மோதல் ஏற்பட்டது. அதற்காக அவரிடமும், அவரது கட்சி தலைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக மேலும் ஒரு தகவலை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக எனது கட்சி தலைமை விசாரணை நடத்தியபோது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டப்பட்டேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கதறியபடி கூறினார்.
இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருந்தபோது அதிமுக மாநிலங்களவை தலைவர் நவநீதகிருஷ்ணன் உள்பட அதிமுக எம்பிக்கள் குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவையில் சசிகலா புஷ்பாவை பேசவிடாமல் தடுத்தனர். இதனால் சபையில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட மற்ற கட்சி எம்பிக்கள் சசிகலா புஷ்பாவை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும். அவர் சொல்ல வந்ததை சொல்லவிட வேண்டும் என்றனர். இதையடுத்து, அவரை பேச சபையின் துணைத்தலைவர் பிஜே குரியன் அனுமதி அளித்தார். அப்போது மீண்டும் சசிகலா புஷ்பா பேசும் போது, இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்குள்ளது. நான் துன்புறுத்தப்பட்டுள்ளேன். எனக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. அங்கு எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். எனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எந்தவித பலனை அனுபவிக்கவும் நான் மாநிலங்களவைக்கு வரவில்லை என்று பேசினார்.
துணை சபாநாயகர் உறுதி: சசிகலா புஷ்பா ேபசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட நவநீதகிருஷ்ணன், சசிகலா புஷ்பா பேச்சு முழுவதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அதிமுக எம்பிக்களும் அவரது பேச்சை நீக்க கோஷம் எழுப்பினர். இதுகுறித்து பேசிய துணை தலைவர் பிஜே குரியன், இந்த சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சபை தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். உங்கள் அனைவருக்கும் அவர் பாதுகாப்பை உறுதி செய்வார். உங்களுக்கும் அவர் பாதுகாப்பு தருவார். எழுத்துப்பூர்வமாக சபை தலைவரிடம் புகார் அளித்தால் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார். வெங்கையா சமாதானம்: மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு பேசுகையில் ஒரு உறுப்பினர் தவறு செய்து விட்டார். அதனால், நாடாளுமன்றத்தில் கண்ணியம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த உறுப்பினருக்கும் தனது பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டால் சபை தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்கலாம். அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்றார்.
காங்கிரஸ் ஆதரவு: சசிகலா புஷ்பா பிரச்னை குறித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டிருந்தபோது காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் குறுக்கிட்டு பிரச்னை குறித்து முழுமையாக பேச அவரை அனுமதியுங்கள். ஒரு உறுப்பினர் தனது கருத்தை தெரிவிப்பதை எப்படி தடுக்க முடியும் என்றார். காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்களும் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சசிகலா புஷ்பா பேசும்போது, சமாஜ்வாதி கட்சி எம்பி நரேஷ் அகர்வால் குறுக்கிட்டு ஒரு உறுப்பினர் தனது தனிப்பட்ட பிரச்னை குறித்து சபையில் பேச அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரித்தார். அவருடன் அதிமுக எம்பிக்களும் சேர்ந்து கொண்டு குரல் எழுப்பினார்கள். மேலும் சசிகலா புஷ்பா பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி மீண்டும் குரல் எழுப்பினார்கள். இதைதொடர்ந்து சசிகலா புஷ்பா பேச்சின் ஒரு பகுதியை அவை குறிப்பிலிருந்து நீக்குவதாக துணைத்தலைவர் பிஜே குரியன் அறிவித்தார்.
மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். அவர் மேலும் பேசுகையில் எனது உயிருக்கும், கண்ணியத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அரசு என்னை பாதுகாக்குமா? எனது பாதுகாப்பு குறித்து யார் விளக்கம் தருவார்கள் என்று கதறி அழுதபடி கூறினார். மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு இதற்கு பதில் அளிக்கையில் இந்த விவாதம் சபையின் கண்ணியத்திற்கு அழகு சேர்க்காது. எனவே இந்த பிரச்னையில் நான் பேச விரும்பவில்லை. இருப்பினும் சபையில் எந்த ஒரு உறுப்பினருக்கும், எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அவர்கள் சபை தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் தரலாம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்றார். சபை துணைத்தலைவர் பிஜே குரியன் பேசுகையில் நீங்கள் சபை தலைவருக்கு இதுபற்றி எழுதுங்கள். அவர் உங்களை பாதுகாப்பார். உங்கள் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும். சபை தலைவரின் பொறுப்பில் இருந்து நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். உங்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.
அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கம்
நாடாளுமன்றத்தில் அதிமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சசிகலா புஷ்பா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர் கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என உத்தரவில் ஜெயலலிதா கூறியுள்ளார்.