ஜெர்மனியில் வணிக வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு 9 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2016 (வெள்ளிக்கிழமை)
ஜெர்மனியில் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெர்மனியில் முனிச் என்ற நகரில் வணிக வளாகம் உள்ளது. இதில் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த கூட்டத்தினரை பார்த்து சரமாரியாக சுட்டதில் 9 பேர் பலியாகி உள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து வந்த போலீசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அங்கு பதற்றமன சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ட்ருச்லிங்கன் நகரில் இருந்து வெர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 9.15 மணிக்கு அந்த பயணிகள் ரெயில் வெர்ஸ்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ரெயில் வெர்ஸ்பர்க் நகரை வந்தடைந்ததும், அதில் பயணம் செய்த ஒரு வாலிபர், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்தினார். இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு அவர் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். ஆனால் அவரை போலீசார் துரத்திச்சென்று சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது. இதற்கிடையே பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர், தங்களது இயக்கத்தைச் சேர்ந்த வீரர் என்று ஐ.எஸ். இயக்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.