சென்னையில் கிளம்பிய விமானப்படை விமானம் மாயம் : 29 பேர் கதி என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2016 (வெள்ளிக்கிழமை)
சென்னை: தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் இருந்து அந்தமானுக்கு வீரர்கள் உட்பட 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் நடுவழியில் திடீரென மாயமானதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடுவானில் காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணியில் விமானப்படை விமானங்களும், 13 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானத்தில் உள்ளவர்களில் அதிகாரிகள் உட்பட 12 பேர் தமிழர்கள். சென்னையை அடுத்த தாம்பரத்தில் விமானப்படை பயிற்சி பள்ளியும், விமானப்படை தளமும் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட இலகு ரக விமானமான ஏஎன்-32 செயல்பாட்டில் இருந்து வந்தது. ரஷ்ய நாட்டு தயாரிப்பான இந்த விமானம் சரக்கு கொண்டு செல்வதற்கும், வீரர்களை அழைத்து செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
அந்தமானுக்கு புறப்பட்டது: இந்நிலையில், தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு ஏஎன்-32 என்கிற அந்த விமானம் அந்தமான் தலைநகர் போர்ட் ஃபிளேயருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 6 விமானிகள், உதவி விமானிகள், 12 வீரர்கள், ராணுவம், கடற்படை, கடலோர காவல்படையை சேர்ந்த தலா ஒருவர் என 3 வீரர்கள், வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் என 12 தமிழர்கள் உட்பட மொத்தம் 29 பேர் இருந்துள்ளனர். தகவல் தொடர்பு துண்டிப்பு: ஏஎன்-32 என்கிற இந்திய போர் விமானம் சரியாக 11.30 மணிக்கு அந்தமான் சென்றிருக்க வேண்டும். ஆனால், இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமான தளத்துடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த விமானம் சென்னைக்கு கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா கடல் மீது 23,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டு இருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் விமானத்தை தொடர்பு கொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. விமானம் திசை மாறி சென்றதா என்பதை கண்டறிய நடந்த முயற்சியும் பலனிக்கவில்லை.
தேடுதலில் 13 கப்பல்: விமானம் மாயமான தகவல், உடனடியாக விமானப்படை தளபதி அரூப் ராஹா உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. தகவல் அறிந்ததும் அவர்கள் உடனடியாக காணாமல் போன விமானத்தை தேட உத்தரவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் கப்பற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன விமானப்படை விமானத்தை தேடும் பணியை தொடங்கினர். கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சிறிய ரக விமானங்கள், ரோந்து படகுகள், விமானப்படைக்கு சொந்தமான 2 டோனியர் ரக விமானங்கள், கடற்படைக்கு சொந்தமான 4 போர் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரக்கோணம் கடற்படை விமானதளத்தை சேர்ந்த மேலும் 2 விமானங்கள் நேற்று பிற்பகல் முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. கடலுக்கடியில் தேடுவதற்காக நேற்று மாலையில் இருந்து நீர்மூழ்கி கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
நேற்று காலை தொடங்கிய பணி இரவிலும் தொடர்ந்தது. காணாமல் போன விமானத்தை தேடும் பணியை பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேடும் பணியை மேம்படுத்துவது குறித்து விமானப்படை, கப்பற்படை, ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். காணாமல் போன விமானம் எரிபொருள் பற்றாக்குறை அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திசை மாறி சென்றிருக்குமா, திடீர் வானிலை மாற்றத்தால் விபத்தில் சிக்கியிருக்குமா என பல்வேறு யூகங்கள் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் அச்சத்துடன் ராணுவ அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர்.
3வது முறை சம்பவம்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் அதுவும் ஏஎன்-32 வகை விமானம் காணாமல் போவது இது 2வது முறையாகும். ஏற்கனவே 1986ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து 450 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.