அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா இன்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க. சார்பில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ.கருப்பையா. இவர் ‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்று பேசியபோது அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், அமைச்சர்கள், அதிகாரிகள் கொள்ளையடிப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னரும் அ.தி.மு.க.வையும், அரசியல்வாதிகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், பழ.கருப்பையா இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு கருணாநிதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டபோதே தி.மு.க.வில் இணைய வேண்டும் என்று நினைத்ததாகவும், பின்னர் கட்சியின் தலைவர் கருணாநிதியே தனக்கு அழைப்பு விடுத்ததால் இன்று இணைந்திருப்பதாகவும் கூறினார்.