ஜெர்மனியில் ரெயிலில் கோடாரியால் தாக்குதல் நடத்திய ஆப்கான் அகதி சிறுவனின் அறையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத கொடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஜெர்மனியின் தெற்கு நகரான வூர்ஸ்பர்கில் பயணிகள் ரெயிலில் இரவு ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி சிறுவன் கோடாரி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்திஉள்ளான். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற அகதி சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரது நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெர்மனியின் பவாரியா மாகாண உள்துறை மந்திரி ஜோயாச்சிம் ஹெர்மன் பேசுகையில், இத்தாக்குதலுக்கான உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை, என்றார். சிறுவன் ஜெர்மனிக்கு ஆதரவற்ற நிலையிலே வந்துஉள்ளான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இது ஐ.எஸ். தாக்குதலாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரெயிலில் தாக்குதல் நடத்திய அச்சிறுவன் ”அல்லா அக்பர்,” என்று சத்தம் எழுப்பியதாக பவாரியா மாகாண உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரான்ஸில் நடந்ததைப் போல தாக்குதல்கள் ஜெர்மனியிலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசார் சிறுவன் தங்கியிருந்த அறையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கையால் தீட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கொடி உள்ளே கண்டுபிடிக்கப்பட்டது என்று உள்துறை மந்திரி ஜோயாச்சிம் ஹெர்மன் கூறிஉள்ளார்.