துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஒரு பகுதியினரை அரசு ஆதரவு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த ராணுவப் புரட்சியை முறியடித்துவிட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட 161 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 2 ஆயிரத்து 839 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் பிரதமர் பினாலி யில்டிரிம் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டதாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை சட்டப்படி அணுக வேண்டும் என்று துருக்கி அரசுக்கு ஏஞ்சேலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்விற்கு ஏஞ்சேலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், “துருக்கியில் உள்ள அனைவரும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். ஆட்சி மாற்றம் பாராளுமன்றத்தின் வழியாக தான் நடைபெற வேண்டும்” என்றார்.