மாநில உரிமைகளைப் பறிப்பதாக மத்திய அரசு மீது ஜெயலலிதா தாக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2016 (சனிக்கிழமை)
மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை தன் கையில் எடுத்துவருவதாகவும் ஆனால் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டும் மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
புதுதில்லியில் சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடந்த மாநிலங்கள் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு முதல்வரின் உரையை வாசித்தார்.
2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முதன் முறையாக மாநில கவுன்சில் கூட்டம் நடப்பதைச் சுட்டிகாட்டிய ஜெயலலிதா, இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மாநிலங்களுக்கு இருந்த சட்டம், நிதி தொடர்பான அதிகாரங்களை தன் வசம் எடுக்க மத்திய அரசு முயற்சித்துவருவதாக கூறினார். ஆனால், மாநிலங்களின் நலன் குறித்த செயல்பாடுகளை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில அரசு பட்டியலில் உள்ள விவகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவது, வரி வருவாயை மத்திய அரசே எடுக்க ஆரம்பிப்பது போன்றவற்றின் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிக்கை
மத்திய- மாநில அரசு உரிமை குறித்த பஞ்சி ஆணையத்தின் பல்வேறு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறினார். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
வனம் மற்றும் வனவிலங்கு ஆகியவற்றை மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய - மாநிலப் பட்டியலுக்கு மாற்றி, சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் மத்திய அரசு இணைத்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெயலலிதா, அதே நேரத்தில் சுற்றுச்சூழலை ஏன் மத்தியப் பட்டியலில் இருந்து மத்திய - மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லையெனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்யவிருந்தால், அது குறித்து மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசுகளைக் கலைப்பது குறித்து பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அம்சங்களையும் இணைத்து மாநில அரசுகளை கலைக்கப் பயன்படும் அரசியல் சாசனத்தில் 356வது பிரிவை மாற்றியமைக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
மேலும், மாநிலங்களவையின் அதிகாரங்களைக் குறைக்கக்கூடாது என்றும் நீதி நிர்வாகத்திற்கான செலவை மத்திய அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.