துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 265 பேர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2016 (சனிக்கிழமை)
துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது
கொல்லப்பட்டோரில் 104 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள்.
ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு துவங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் துருக்கியின் நான்கு முக்கிய அரசியல் பிரிவுகளும் திட்டமிடப்பட்ட இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
அவர்களின் இந்த கூட்டு நிலைப்பாடு துருக்கியின் ஜனநாயகத்திற்கு மதிப்பிட முடியாதது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
துருக்கியின் நாடாளுமன்ற கட்டடமும் டாங்கிளாலும், விமானங்களாலும் வெள்ளிக்கிழமை இரவில் தாக்குதலுக்குள்ளானது.
இந்த அதிரடி புரட்சி முயற்சியை தேசத் துரோக நடவடிக்கை என்று துருக்கி அதிபர் ரசீப் தையிப் எர்துவான் சாடியுள்ளார்.
மக்களை வீதியில் இறங்கி போராட தன்னுடைய டுவிட்டர் சமூக வலைத்தளம் மூலம் அவர் அழைப்பு விடுத்தார்.
அவருடைய அழைப்பை ஏற்ற பொது மக்களும் வீதிகளில் திரண்டு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துள்ளனர்.
இது துருக்கியின் ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கறுப்பு கறை என்று துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் விவரித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் இறந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து ராணுவத்தின் டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை கைப்பற்றிய துருக்கி ராணுவத்தை சேர்ந்த 3,000 பேரை தடுத்து வைத்துள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அமைதியின்மைக்கு ஃபாதுல்லா ஹியூலென் என்ற மதபோதகரை குறித்துகாட்டும் இணை அமைப்பு தான் காரணம் என்று துருக்கி அதிபர் எர்துவான் குற்றம் சுமத்தியுள்ளார்.
துருக்கியை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் மத போதகரான ஹியூலென், துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கும் தனக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என்று மறுத்துள்ளார்.
75 வயதான அவர் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கடுமையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் கிரேக்க நாட்டிற்குள் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தற்போது தெரிவித்துள்ளது.
அங்கு அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ள எட்டு பேரையும் துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவு அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்ததை அடுத்து, நாட்டை அமைதிக் கவுன்சில் ஒன்று வழிநடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவும் ராணுவச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.