உலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2016 (வியாழக்கிழமை)
உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தற்போது உலகநாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அபுதாபிக்கு வர உள்ளது.
முதல் ‘சோலார் விமானம்’
உலக நாடுகள் அனைத்தும் பெட்ரோலிய மற்றும் இயற்கை வளங்களில் இருந்து பெறப்படும் எரிசக்திக்கு மாற்றுப்பொருளாக சூரியஒளியை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக, முற்றிலும் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது.
இந்த சூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் விமானம், சாதாரண விமானத்தை விட சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளது. அதன்படி சாதாரண ‘போயிங் 747’ ரக விமானத்துடன் இதை ஒப்பிடும்போது இறக்கைகள் 3 மீட்டர் கூடுதலான நீளமுள்ளவையாக உள்ளது. இதன் எடை வெறும் 2.3 டன் மட்டுமே உள்ளது. இதே சாதாரண விமானங்கள் 154 டன் எடை கொண்டவையாகும்.
இந்த விமானத்தை அதிகபட்சமாக மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும். சாதாரண விமானம் 17 மணி நேரத்தில் பயணிக்கும் தூரத்தை, இந்த விமானத்தில் 6 நாட்கள் பயணம் செய்ய வேண்டி வரும். தொடர்ந்து இந்த விமானத்தில் 8 ஆயிரம் கிலோ மீட்டர்கள் நிற்காமல் பயணம் செய்யமுடியும்.
இதன் இறக்கைகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் 17 ஆயிரம் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சோலார் செல்கள் தானாக மின்சாரத்தை புதுப்பித்துக்கொள்ளும் திறன் பெற்றவை.
பல்வேறு நாடுகளில் பயணம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10–ந் தேதி அபுதாபியில் இருந்து இந்த சோலார் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த பயணத்தில் அபுதாபியில் இருந்து புறப்பட்டு ஓமன், இந்தியாவின் ஆமதாபாத் மற்றும் வாரணாசி, பர்மா, சீனா, ஹவாய் தீவுகள், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் வழியாக ஸ்பெயின் சென்றடைந்தது. தற்போது மொத்தம் 35 ஆயிரத்து 400 கிலோ மீட்டர்கள் பறந்து முடித்து மீண்டும் அபுதாபிக்கு வர உள்ளது.
இந்த விமானத்தை தற்போது ஒருவர் மட்டுமே இயக்க முடியும். விமான பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நிறுவனர் மற்றும் விமானிகளில் ஒருவர் ஆண்ட்ரே போர்ச்பெர்க். இவர் சுவிட்சர்லாந்தின் விமானப்படையில் பணியாற்றியவர்.
இவரோடு அதே நாட்டை சேர்ந்த பெர்னார்டு பிக்கார் என்ற விமானியும் இந்த விமானத்தை இயக்குகிறார். ஒருவர் மட்டுமே இதில் அமர்ந்து பயணம் செய்ய முடியும் என்பதால், இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இந்த விமானத்தை இயக்குகிறார்கள்.
வெற்றி பயணம் நிறைவு
இந்த விமானம் தற்போது தனது உலக பயணத்தை வெற்றிகரமாக முடித்துகொள்ள உள்ளது. தற்சமயம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் தரை இறங்கி உள்ள இந்த விமானம், ஒரு ஆண்டு கழித்து மீண்டும் அபுதாபிக்கு வந்து சேர உள்ளது.
இது குறித்து விமானி பெர்னார்டு பிக்கார் கூறியதாவது:–
இதே போல சோலார் விமானத்தை பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் எரிசக்தியை ஒரு நாடு முழுவதுமாக மிச்சப்படுத்த முடியும். அதிகபட்சமாக 55 பயணிகள் கொண்ட விமானங்களை இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கலாம்.
இந்த மிக நீண்ட பயணத்தை இது வரை யாரும் செய்ததில்லை. மேலும் விரைவில் கெய்ரோவில் இருந்து அபுதாபிக்கு வந்து எங்கள் பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்த சோலார் விமானத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களும் இதன் தோற்றத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளனர்.