தமிழ் மக்களின் பிரச்சினை இப்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை மீதான சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ்ப்பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டுமென திடமாக வலியுறுத்தி வருகிறோம். அதனை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தமிழர் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அவ்வாறு கூறவில்லை. ஒரு பக்குவமான, படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவிருக்கிறோம்.
நியாயமான நிரந்தரமான முடிவொன்றை எட்டுவதற்கு அனைத்துலக பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. உண்மை அறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். அதுவே உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை எவரும் குழப்பாது பொறுமை காக்க வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தில் இருந்து சமூகவிரோதிகளால் வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்ட பொழுது இந்த நாட்டுக்கு உரித்துடைய தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கு பேணப்படவில்லை. அது பாரதூரமான குற்றமாகும். இந்த நாட்டை விட்டு இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறினார்கள். தமிழ் மக்களில் அரைப்பங்கினர் இலங்கைக்கு வெளியே வாழ்கின்றார்கள். இந்தியாவில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பக்கூடிய நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாம் பெரும்பான்மை மக்களை எதிர்க்கவில்லை. அவர்கள் எமது சகோதரர்கள். நாமும் அவர்களும் சமத்துவமாக வாழவேண்டும். நாம் இரண்டாம்தரப் குடிமக்களாக வாழ முடியாது. இறைமையின் அடிப்படையில் எமது அபிலாசைகளை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு. புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தற்போதுள்ள நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியும்.
தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் எதிர்பார்த்தளவில் கருமங்கள் வேகமாக நடைபெறாது விட்டாலும் கூட முன்னேற்றங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. நியாயமான, நிரந்தரமான நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு, அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு எமது முழு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவிருக்கிறோம். தமிழ் மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். அவர்கள் மீண்டும் ஏமாற்றப்பட முடியாது. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.