புதனன்று டேவிட் கேமரூன் ராஜினாமா செய்கிறார், அடுத்த பிரதமராக தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2016 (திங்கட்கிழமை)
புதனன்று ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறிஉள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்பதில் தெரஸா மேவை எதிர்த்து களத்தில் நின்ற எரிசக்தி அமைச்சர் ஆண்ட்ரியா லெட்சம் இந்த போட்டியிலிருந்து விலகினார்.
போட்டியில் இருந்து விலகுவதாக ஆண்ட்ரியா லெட்சம் அறிவித்ததை தொடர்ந்து தெரஸா மேவிற்கு வழிவிடும் வகையில் புதனன்று பதவியை ராஜினாமா செய்யப்போவதாக டேவிட் கேமரூன் அறிவித்து உள்ளார்.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புதிய தலைவர் மிக அவசரமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற தேசிய நலனுக்காக இந்த போட்டியிலிருந்து விலகுவதாக ஆண்ட்ரியா லெட்சம் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமர் தெரஸா மே என்பதை உறுதிப்படுத்த கன்சர்வேட்டிவ் கட்சியானது ஆலோசனை நடத்தி வருகிறது.
டேவிட் கேமரூன் பேசுகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்களின் முழு ஆதரவையும் தெரஸா மே பெற்று உள்ளார், போட்டியில் இருந்து விலகி ஆண்ட்ரியா லெட்சம் சரியான முடிவை எடுத்து உள்ளார் என்று கூறிஉள்ளார்.