தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 29 ஆண்டுகள் கடந்துவிட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.
இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறு ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள்.
2007ம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான் கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.
முள்ளிவாய்க்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீர வரலாறானார்கள்.
வெளியில் தெரியாத அந்த அற்புத மனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.
கரும்புலிகளின் வரலாறு
ஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.
இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கி விட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.
வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் ‘லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் ருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத் தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.
கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில், நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.
இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சினையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.
கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். ஸ்ரீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித் தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேணும்.
தொடர்ந்தும் எமது மக்கள் ஸ்ரீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்த போதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலை கொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.
கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.
ஆனால் வீட்டிலிருக்கும் வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.
லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.
‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.
‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க் கோழி காக்கிற மாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’
என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக் கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.
கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவவொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.
இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.
என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.
1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
எல்லோருக்குமே பரபரப்பு
தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் ஸ்ரீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது
ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப் போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.
‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.
ஆர்ப்பரித்து எழுந்த அலை ….
சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.
அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.
ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.
தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்ற போது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப் போட்டுவிட்டது.
இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.