வீரர்களுக்கே முதல் மரியாதை... பயிற்சியாளர் கும்ப்ளே உற்சாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
பயிற்சியாளர் யார் என்பதை விட, வீரர்களின் நலனே முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி முகாம் பெங்களூர், தேசிய கிரிக்கெட் அகாடமி வளாகத்தில் நேற்று தொடங்கியது. தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்தனர்.
பயிற்சியாளர் பதவிக்காக முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி நேர்காணலில் பங்கேற்றபோது, தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அந்த சந்திப்பை தவிர்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது பற்றி கும்ப்ளேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கும்ப்ளே கூறியதாவது: தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதும், நான் தொடர்பு கொண்ட முதல் நபர் ரவி சாஸ்திரி தான். இந்திய அணியின் இயக்குனராக அவரது பங்களிப்பு மகத்தானது. பயிற்சியாளராக ரவி சாஸ்திரியோ அல்லது நானோ... இல்லை வேறு யாராவதோ என்பது முக்கியமல்ல. இந்திய அணி வீரர்களுக்கே இங்கு முதல் மரியாதை என நினைக்கிறேன். வீரர்கள் மற்றும் அணியின் நலமே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும்; வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் இந்தியா நம்பர் 1 அணியாக இருக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தது என நம்புகிறோம். இதில் பயணத்தில் சாஸ்திரிக்கும் எனக்கும் பங்கு உள்ளது. அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். மிக சிறந்த அணியை பெற்றிருக்கிறோம் என அவரிடம் தெரிவித்தேன். இன்று நான் தலைமை பயிற்சியாளராக இருக்கிறேன். ஆனால், அது நிரந்தரம் இல்லை; நாளை வேறு யாராவது வரலாம். எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி வீரர்களுக்கும் அணிக்கும் என்னால் இயன்றதை செய்வேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். அதற்காக பெருமைப் படுகிறேன். இவ்வாறு கும்ப்ளே கூறினார்.