ஐரோப்பிய கோப்பை கால்பந்து: இத்தாலி, ஐஸ்லாந்து அணிகள் கால் இறுதிக்கு தகுதி ஸ்பெயின், இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி, ஐஸ்லாந்து அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறின.
ஐரோப்பிய கால்பந்து
15–வது ஐரோப்பிய கோப்பை (யூரோ) கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின்–இத்தாலி அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. 2008 மற்றும் 2012–ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் உலா வந்தது. ஸ்பெயின் அணியினர் பந்துடன் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டாலும், இத்தாலி அணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியவில்லை. இத்தாலி அணியினரின் ஆட்ட யுக்தி அருமையாக இருந்தது.
பிரிகிக்
33–வது நிமிடத்தில் இத்தாலி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஈடெர் ‘பிரிகிக்’ வாய்ப்பை பயன்படுத்தி கோலை நோக்கி பந்தை அடித்தார். அந்த பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் டேவிட் டீ ஜியா தடுத்தார். பந்து அவரது கையில் பட்டு முன்னால் விழுந்தது. அதனை இத்தாலி வீரர் செலினி ராக்கெட் வேகத்தில் அடித்து கோலாக்கினார். முதல் பாதியில் இத்தாலி அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பின்பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்ப கடுமையாக போராடியது. ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை. கடைசி நிமிடத்தில் (90–வது நிமிடம்) இத்தாலி அணி 2–வது கோலை போட்டது. டார்மியன் கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் பெல்லே கோலாக்கி அசத்தினார்.
ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி
முடிவில் இத்தாலி அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி அளித்து கால் இறுதிக்குள் நுழைந்தது. 2012–ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் கண்ட தோல்விக்கும் இத்தாலி பழிதீர்த்துக் கொண்டது. இந்த தோல்வியின் மூலம் ஸ்பெயின் அணியின் 8 ஆண்டு கால நடப்பு சாம்பியன் அந்தஸ்து முடிவுக்கு வந்ததுடன், போட்டியை விட்டும் வெளியேறியது. இத்தாலி அணி கால்இறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியை (ஜூலை 2–ந் தேதி) எதிர்கொள்கிறது.
தோல்விக்கு பிறகு ஸ்பெயின் பயிற்சியாளர் வின்சென்ட் டெல் போஸ்க்யூ கூறுகையில், ‘எங்களை விட இத்தாலி அணியினர் நன்றாக ஆடினார்கள். என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் மிகச் சிறப்பான கால்பந்து ஆட்டத்தை ஆடினார்கள் என்று சொல்ல முடியாது. இந்த தோல்வியால் ஸ்பெயினின் கால்பந்து அத்தியாயம் முடிந்து விட்டதாக அர்த்தம் கிடையாது. ஸ்பெயின் நாட்டில் கால்பந்து கட்டமைப்பு இன்னும் வலுவாகவே உள்ளது. சிறந்த வீரர்களும், பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். இனி நம்முடைய அடுத்த நோக்கம் 2018–ம் ஆண்டு உலக கோப்பைக்கு தகுதி பெறுவதை நோக்கி இருக்க வேண்டும். பயிற்சியாளராக நீடிப்பதா? என்பது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவரை சந்தித்து பேசிய பிறகு எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்’ என்றார்.
ஐஸ்லாந்திடம் பணிந்த இங்கிலாந்து
மற்றொரு 2–வது சுற்றில் உலக தரவரிசையில் 11–வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, தரவரிசையில் 34–வது இடத்தில் இருக்கும் ஐஸ்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4–வது நிமிடத்தில் கோல் அடித்தது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் கேப்டன் வெய்ன் ரூனி இந்த கோலை அடித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 6–வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் ராக்னர் சிகுர்ட்சன் இந்த கோலை அடித்தார்.
18–வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணி 2–வது கோலை திணித்து இங்கிலாந்து அணியை திக்குமுக்காட வைத்தது. கோல்பின் சிக்தோர்சன் இந்த கோலை போட்டார். இரு அணியினரும் அதன் பிறகு கோல் அடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கு பலன் கிட்டவில்லை. முடிவில் ஐஸ்லாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. கால் இறுதியில் ஐஸ்லாந்து அணி, பிரான்சை (ஜூலை 3–ந் தேதி) சந்திக்கிறது.
பயிற்சியாளர் ராஜினாமா
தகுதி சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் (10) வெற்றி கண்ட இங்கிலாந்து அணி, 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட குட்டி தீவான ஐஸ்லாந்திடம் ‘சரண்’ அடைந்தது இங்கிலாந்து ரசிகர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது. 1950–ம் ஆண்டு உலக கோப்பையில் அமெரிக்காவிடம் (0–1) சந்தித்த தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணியின் அவமானகரமான தோல்வியாக இது வர்ணிக்கப்படுகிறது. இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. தோல்வி எதிரொலியாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராய் ஹாட்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் வெய்ன் ரூனி கருத்து கூறுகையில், ‘இது எங்களுக்கு மோசமான நாள். சில சமயம் சிறந்த அணியாலும் வெற்றி பெற முடியாது. ஐஸ்லாந்து அணி முன்னிலை பெற்றதும், நாங்கள் பதில் கோல் திருப்புவது கடினம் என்பது தெரியும். ஏனெனில் அந்த அளவுக்கு ஐஸ்லாந்து அணியின் ஒருங்கிணைந்த ஆட்டம் நன்றாக இருந்தது. ஐஸ்லாந்தை வென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் களம் கண்டோம். ஏமாற்றமான முடிவே எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. இந்த தோல்வியை மறந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்’ என்றார்.