இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு விலகும் முடிவை முறியடிப்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2016 (திங்கட்கிழமை)
ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு விலகும் முடிவை முறியடிப்போம் என ஸ்கொட்லாந்து அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு விலகுவது குறித்து இங்கிலாந்தில் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இந்த பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு விலக அதிக மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்பதற்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
இதனையடுத்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக டேவிட் கமரூன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு இங்கிலாந்து விலக வேண்டுமானால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து பாராளுமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், இந்த தீர்மானத்தை ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்போவதாக, ஸ்கொட்லாந்து அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் கூறினார்.
மேலும் அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என ஸ்கொட்லாந்து மக்கள் தெளிவாக ஓட்டளித்துள்ளனர். மக்கள் முடிவை ஏற்க வேண்டும். மக்கள் எண்ணத்தை செயல்படுத்துவது எனது கடமை, பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டத்தினை தோற்கடிக்க முயற்சி செய்வோம் எனக்கூறினார்.