கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு: இங்கிலாந்து- இலங்கை முதல் ஒருநாள் ‘டை’
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் களம் இறங்கிய இலங்கை துவக்க வீரர் குணதிலகா 9 ரன்னில் வெளியேற பின்னர் வந்த மெண்டீஸ் 17, குஷால் பெரேரா 24 ரன்னில் ஆட்டம் இழந்தனர். சண்டிமால் 37 ரன், பிரசன்னா 28 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்னும் எடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் மேத்யூஸ் 73 ரன் அடித்தார். 50 ஓவரில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன் சேர்த்தது. இங்கி. தரப்பில் வோக்ஸ், பிளங்கெட் வெல்லி தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ராய் 3, ஹேல்ஸ் 4, ரூட் 2 , போர்ஸ்டோவ் 3 ரன்னில் ஆட்டம் இழக்க 30 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த மோர்கன் 43, மொயின் அலி 7 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
82 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், பட்லர்- வோக்ஸ் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 138 ரன் குவித்தது. பட்லர் 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு14ரன் தேவைப்பட அந்த ஓவரை பிரதீப் வீசினார். முதல் 5 பந்தில் 7 ரன் எடுக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்ட நிலையில், பிளங்கெட் சிக்சர் அடித்தார். இதனால் இங்கி. 8 விக்கெட் இழந்து 286 ரன் எடுக்க ஆட்டம் டை ஆனது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 95 ரன் அடித்த வோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இலங்கை தரப்பில் மேத்யூஸ், லக்மல், பிரதீப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.