யூரோ கோப்பை கால்பந்து ஸ்பெயினுக்கு அதிர்ச்சி அளித்தது குரோஷியா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நள்ளிரவு நடந்த போட்டியில், குரூப் டி-ல் இடம்பெற்றுள்ள குரோஷியா-ஸ்பெயின் அணிகள் மோதின. 7வது நிமிடத்தில் மொராட்டா அடித்த கோலால், ஸ்பெயின் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடியும் தருவாயில் (45வது நிமிடம்), குரோஷியாவின் காலினிக் பதில் கோல் திருப்பினார். ஆட்டம் முடிய 3 நிமிடங்களே இருந்த நிலையில் (87வது நிமிடம்), இவான் பெரிசிக், குரோஷியா அணிக்கு வெற்றிக்கான கோலை அடித்து, ஸ்பெயினுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனான ஸ்பெயின், 2004 யூரோ கோப்பையில், ஜுன் 20ம் தேதி போர்ச்சுக்கல்லுக்கு எதிராக தோல்வி கண்டிருந்தது. அதன்பின் ஸ்பெயின் கண்ட முதல் தோல்வி இதுதான்.
4385 நாட்கள், 15 போட்டிகளுக்கு பின்பாக, யூரோ கோப்பையில் ஸ்பெயின் தோல்வியை தழுவியுள்ளது. குரூப் டி-ல் குரோஷியா முதலிடம் (7 புள்ளிகள்), ஸ்பெயின் (6 புள்ளிகள்) 2ம் இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின், இத்தாலியையும், குரோஷியா, 3வது நிலையில் தகுதி பெறும் ஒரு அணியையும் எதிர்கொள்கின்றன. இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், செக் குடியரசை 2-0 என்ற கோல் கணக்கில் துருக்கி வீழ்த்தியது. துருக்கியின் இல்மாஜ் (10வது நிமிடம்), டுபான் (65வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த தோல்வியால் செக் குடியரசு வெளியேறியது. 3வது நிலை அணிகளில் சிறந்த அணிகள் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற, மற்ற ஆட்டங்களின் முடிவுக்காக துருக்கி காத்து கொண்டிருக்கிறது.இதேபோல் குரூப் சி-ல் நடந்த போட்டியில் உக்ரைனை 1-0 என்ற கோல் கணக்கில் போலந்து வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குரூப் சி-ல் 2ம் இடத்தை பிடித்த போலந்து, யூரோ கோப்பையில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், வடக்கு அயர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில், உலக சாம்பியன் ஜெர்மனி வீழ்த்தியது. குரூப் சி-ல் முதலிடத்தை பிடித்த ஜெர்மனி, 2ம் இடம் பிடித்த போலந்து ஆகிய அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், 3வது நிலை அணிகளில் சிறந்த அணிகள் அடிப்படையில் வடக்கு அயர்லாந்தும், நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. துருக்கியிடம், செக் குடியரசு வீழ்ந்ததால், வடக்கு அயர்லாந்துக்கு இந்த வாய்ப்பு கிட்டியது குறிப்பிடத்தக்கது.
திக்...திக்...நிமிடங்கள் செக் குடியரசுக்கு எதிரான லீக் போட்டியின் போது, தீப்பந்தங்களை மைதானத்துக்குள் எரிந்து குரோஷிய ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்றைய ஸ்பெயினுக்கு எதிரான போட்டியிலும், குரோஷிய ரசிகர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என தகவல் வெளியானது. அதிலும் குறிப்பாக 30வது நிமிடத்தில், ரெப்ரி குப்பியர்சை, அவர்கள் தாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. குரோஷிய போலீஸ் யூனியன் பிரசிடென்ட் நிகோலா காஜ்கிக் இந்த தகவலை வெளியிட்டார். இந்த பீதிக்கு மத்தியிலேயே போட்டி நடந்தது. ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.