வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் பதற்றம் : படைகளை தயாராக இருக்கும்படி ஜப்பான் உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)
நடுத்தர இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியா இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதையடுத்து, ஜப்பான் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடற்படை மற்றும் வான் படைகளை எந்நேரமும் எதிர் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியா தற்போது வெற்றிகரமாக பரிசோதித்துள்ள ஏவுகணையானது 1000 கி.மீ தொலைவு பாய்ந்து சென்று தாக்கும் திறனுடையது என ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே வடகொரியா ஏவுகணையை பரிசோதித்துள்ளது ஐ.நா உடன்படிக்கைக்கு எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் வடகொரியாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவே ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக வடகொரியா கூறியுள்ளது.