எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவிருப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, போர்க்குற்ற விசாரணைகளின் தாமதம் குறித்தும், அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், எதிர்வரும் 29ம் திகதி மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பாக வாய்மொழி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த சந்திப்புக்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகின்றது.