இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய பேரறிவாளனுக்கு, உரிய பதில் தராமல் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள் என எரவாடா சிறை நிர்வாகம் பதில் கூறி அதிர வைத்துள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தண்டனை காலம் முடிவடைய 8 மாதங்கள் இருந்த நிலையில் முன்னதாகவே விடுவிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எரவாடா சிறை நிர்வாகத்திடம் சில கேள்விகளை பேரறிவாளன் முன் வைத்திருந்தார். சஞ்சய் தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும். எந்த அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சஞ்சய் தத்தை முன் கூட்டியே விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் மாநில அரசு, சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசை கலந்து ஆலோசித்ததா என்பன போன்ற கேள்விகளை கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகம் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என கூறியிருந்தது. பேரளிவாளன் பதிலுக்கு அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ தனது அதிகார வரம்பை பயன்படுத்தி எடுக்கும் எந்த முடிவையும் மக்களின் ஆய்வுக்கு அளிக்க கடமைப்பட்டவர்கள் என கூறியிருந்தார். இந்த பதிலை எதிர்பார்க்காத எரவாடா சிறை அதிகாரிகள் வரும் 28ம் தேதி பிரதிநிதி ஒருவரை அனுப்பி அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளது. விவரங்களை நேரில் வந்து பெற்று கொள்ள சொல்வது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு முரணானது என பேரறிவாளன் தரப்பினர் கூறியுள்ளனர். சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக எரவாடா சிறை நிர்வாகம் அளிக்கும் ஒவ்வொரு ஆவணமும் மிக முக்கியமானவை. பேரறிவாளன் வழக்கில் அடுத்த கட்ட சட்ட நகர்வுகளுக்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது.