ஆப்கானிஸ்தான் அகதிகளின் முகாம்களே பயங்கரவாதிகளின் பாதுகாப்பான் உறைவிடமாகும் என்று பாகிஸ்தான் கூறிஉள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் அல்-கொய்தா, தலீபான், ஹகானி நெட்வோர்க், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி தீவிரவாத தலைவர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இது பாகிஸ்தான் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியது. இருப்பினும் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது.
பென்டகன் சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான தனது 6 மாத கால அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டது. தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்றளவும் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்கிறது. அதன் காரணமாகவே இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் தலிபான், அல்- கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, தெஹ்ரிக்-இ-தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்திய துணைக்கண்ட அல்-கொய்தா பிரிவும் பாகிஸ்தானை மையமாக கொண்டே செயல்படுகிறது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானில் இருந்து எல்லைத் தாண்டிவரும் பயங்கரவாதிகளே தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பிற்கான வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்து உள்ள பேட்டியில், பழங்குடியினப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாத முகாம்களை அழித்த பின்னர், ஆப்கானிஸ்தான் அகதிகளின் முகாம்களே பயங்கரவாதிகளின் பாதுகாப்பான் உறைவிடமாகிஉள்ளது என்று கூறிஉள்ளார். ஆப்கானிஸ்தான் அகதிகள் விவகாரம் பாகிஸ்தானின் பாதுகாப்பு பிரச்சனையாகிவிட்டது என்றும் கூறிஉள்ளார். ஆப்கானிஸ்தான் எல்லையை முறைப்படுத்தாவிட்டால் பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகள் பாதுகாப்பாக இருக்காது என்றும் கூறிஉள்ளார்.
“பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு மட்டும் பாகிஸ்தான் தடையாக உள்ளது”
இந்தியா - பாகிஸ்தான் நட்புறவு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிஉள்ள அஜிஸ், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா எப்போதும் தன்னுடைய மேலாதிக்கத்தை தொடர முயற்சி செய்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்த மேலாதிக்கத்தை நிராகரித்துவிட்டது. தேசத்தின் நலனை திறனாக பாதுகாக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் முக்கிய நலன்களை பாதுகாப்பது என்பது தேசத்தின் பெரிய சாதனை என்று கூறிஉள்ளார்.