யூரோ 2016 கால்பந்து தொடரின் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஆஸ்திரியா அணிகள் டிரா செய்தன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த இப்போட்டியில், போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்பட பல வீரர்கள் கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தனர். 29 நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நானி அடித்த பந்து ஆஸ்திரியா கோல் கம்பத்தில் பட்டுத் தெறித்து வெளியேறியது.
ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர்கள் தவறிழைக்க, பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ரோனால்டோவும் அந்த பந்தை கோல் கம்பத்தில் அடித்து அருமையான வாய்ப்பை கோட்டைவிட்டார். இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதை அடுத்து ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டத்தில் ஐஸ்லேண்ட் அணியுடன் 1-1 என டிரா செய்திருந்த போர்ச்சுகல் அணி, தொடர்ச்சியாக 2வது டிராவுடன் பின்தங்கியுள்ளது. ஹங்கேரி அணியுடன் 22ம் தேதி நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே போர்ச்சுகல் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
ஹங்கேரி - ஐஸ்லேண்ட் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. எப் பிரிவில் ஹங்கேரி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஐஸ்லேண்ட், போர்ச்சுகல் தலா 2 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. ஆஸ்திரியா 1 புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது.