தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமிழகத்தின் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா அளித்தார். 26 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ளார்.
காவரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், தமிழை ஆட்சி மொழியாக்கவும், இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்கவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும், நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடிக்கவும் , பறக்கும் ரயிலையும் - மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா அளித்த மனுவில் தமிழகத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கவும், மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா கோரியுள்ளார். தமிழகத்தி்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் அளவை குறைக்க கூடாது என்றும், 21 தமிழக மீனவர்கள் மற்றும் 92 படகுகளை மீட்கவும், நதிநீர் இணைப்பை நடைமுறைப்படுத்தவும், கூடங்குளம் அணுமின்நிலையத்தின் இரண்டாவது அலகை உடனே துவக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.