கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 0–1 என்ற கோல் கணக்கில் பெருவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.
கோபா அமெரிக்கா கால்பந்து
45–வது கோபா அமெரிக்கா கால்பந்து அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்று லீக் சுற்று ஆட்டத்தில் மோதி வருகின்றன.
இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி, பெருவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 8 முறை சாம்பியனும், வலுவான அணியுமான பிரேசில் அதிர்ச்சி தோல்வி கண்டது.
சர்ச்சைக்குரிய கோல்
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 75–வது நிமிடத்தில் பெரு அணியின் மாற்று ஆட்டக்காரர் ரவுல் ருடியாஸ் சர்ச்சைக்குரிய கோல் அடித்தார். ஆனால் அவர் அடித்த பந்து கையில் பட்டபடி கோலுக்குள் சென்றது டெலிவிஷன் ரீபிளேயில் தெளிவாக தெரிந்தது. ஆனால் நடுவர் அதனை கவனிக்காமல் கோல் என்று அறிவித்தார்.
இந்த கோலுக்கு பிரேசில் அணி வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். பதில் கோல் அடிக்க பிரேசில் அணி கடுமையாக போராடியது. பந்தை தனது கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து இருந்த பிரேசில் அணியால் கடைசி வரை கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் பெரு அணி 1–0 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது.
பிரேசில் வெளியேற்றம்
ஒரு டிரா, 2 வெற்றி கண்ட பெரு அணி தனது பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறியது. முதல் தோல்வியை சந்தித்த பிரேசில் அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 3–வது இடம் பெற்று கால் இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஏற்கனவே பிரேசில் அணி ஒரு வெற்றி (ஹைதிக்கு எதிராக), ஒரு டிரா (ஈகுவடாருடன்) கண்டு இருந்தது. இந்த போட்டி தொடரில் 1987–ம் ஆண்டுக்கு பிறகு பிரேசில் அணி முதல் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஈகுவடார் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை விரட்டியடித்தது. ஈகுவடார் அணியில் இன்னர் வாலன்சியா 11–வது நிமிடத்திலும், ஜாய்மி அயோவி 20–வது நிமிடத்திலும், நோபா 57–வது நிமிடத்திலும், அன்டோனியா வாலன்சியா 78–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
கால் இறுதியில் ஈகுவடார்
ஒரு வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகள் பெற்ற ஈகுவடார் அணி தனது பிரிவில் 2–வது இடம் பிடித்து கால் இறுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து 3–வது தோல்வியை சந்தித்த ஹைதி அணி புள்ளி கணக்கை தொடங்காமல் வெளியேறியது. கால் இறுதியில் பெரு அணி, கொலம்பியாவையும், ஈகுவடார் அணி, அமெரிக்காவையும் சந்திக்கின்றன.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ–வெனிசுலா (அதிகாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் தங்களது பிரிவில் முதலிடத்தை பிடிக்க மல்லுக்கட்டும். மற்றொரு லீக் ஆட்டத்தில் உருகுவே–ஜமைக்கா (காலை 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. கால் இறுதி வாய்ப்பை இழந்து விட்ட இந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தின் முடிவு போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.