இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 416 ரன்கள் குவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)
இங்கிலாந்து– இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (107 ரன்), கிறிஸ் வோக்ஸ் (23 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. கிறிஸ் வோக்ஸ் 66 ரன்களில் கேட்ச் ஆனார். விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 167 ரன்களுடன் (251 பந்து, 18 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் சொந்த மண்ணில், இங்கிலாந்து விக்கெட் கீப்பர்களில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு அலெக் ஸ்டூவர்ட் 1998–ம் ஆண்டு ஓல்டு டிராப்போர்டில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 164 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து விக்கெட் கீப்பரின் அதிகபட்சமாக இருந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி தேனீர் இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்திருந்தது.