பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி கோட்டை நோக்கி பேரணி: அற்புதம்மாள் தலைமையில் பல்வேறு தரப்பினர் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி தொடங்கியது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையில் பல்வேறு தரப்பினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரி பேரணி தொடங்கியது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி கோட்டை நோக்கி பேரணியாக செல்கின்றனர். மேலும் நடிகர்கள் சத்யராஜ், நாசர், இயக்குனர்கள் விக்ரமன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட திரையுலகினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி, வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் ராமகிருஷ்ணனும் உள்ளிட்டவர்களும் பேரணியில் பங்கேற்றுள்ளனர். மேலும் புரட்சிகர இளைஞர் முன்னணி, கொங்கு இளைஞர் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பேரணியில் பங்கேற்றுள்ளன.
மேலும் மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என சென்னையில் பேரணியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.