போர்க்களங்களில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. கவலை!
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)
போர் நடைபெறும் பகுதிகளில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சிறுவர்களைப் போரிடச் செய்வது, கொலை, கடத்தல், பாலியல் வன்முறை ஆகியவற்றுக்கு உள்ளாக்குவது போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், அத்தகைய செயல்களில் ஈடுபடும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த நாடுகள் அமைப்புகளின் பட்டியல் அடங்கிய ஐ.நா. பொதுச் செயலரின் 2015-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சண்டை நடைபெறும் பகுதிகளில் சிறுவர்களைக் கடத்துவது, போரில் ஈடுபடுத்துவது போன்ற செயல்களில் பல அமைப்புகள் ஈடுபடுகின்றன.
சில நாடுகள் மற்றும் சர்வதேசக் கூட்டமைப்புகளே சிறுவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி ஏராளமானவர்களைக் கொன்று குவிக்கின்றன.கடந்த 2015-ஆம் ஆண்டில் இத்தகைய குற்றங்கள் அதிகரித்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.போர்க்களங்களில் சிறுவர் உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் தரப்பினர், ஐ.நா.வின் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது செயல்களுக்காக தண்டிக்கப்படுவர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க் குற்றப் பட்டியலில் சவூதி கூட்டுப் படைசிறுவர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் நாடுகளின் பட்டியலில் யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் பெயர் இடம் பெற்றுள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள், யேமனில் கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர். அந்த ஆண்டு ஐ.நா. வெளியிட்ட சிறுவர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகள் பட்டியலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுப் படையும் 2015-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வான்வழித் தாக்குதல் மூலம் சவூதி கூட்டுப் படை ஏராளமான சிறுவர்களைக் கொன்று குவித்து வருவதால் இந்தப் பட்டியலில் அந்த அமைப்பின் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.