கிழக்கில் அபிவிருத்தி திட்டங்களை குழப்பினால் வடக்கிற்கு மாற்றுவோம்! - அமைச்சர் எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)
கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கவிருந்த அபிவிருத்திகளை அங்குள்ள சில அரசியல் சக்திகளும் சில அரசசார்பற்றநிறுவனங்களும் தடுத்து நிறுத்தியுள்ளன. எதிர்ப்பு தொடர்ந்தால் அந்த திட்டத்தை வடக்குக்கு மாற்றுவோம் என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கிழக்கில் வாகரை பிரதேசத்தில் விசாலமான நன்னீர் மீன்வளத்துறையை அதிகரிக்கும் இறால் பண்ணை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியது. அதனை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கும். ஆனால் அங்குள்ள சில அரசியல் சக்திகளும் சில அரசசார்பற்ற நிறுவனங்களும் மக்களுக்கு பொய்யாக தகவல்களை வழங்கி இத்திட்டத்தை அங்கு ஆரம்பிப்பதற்கு கடுமையான எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன .
எனவே இத்திட்டம் தேவையா? இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை என்றால் இரண்டு கிழமைக்குள் அறிவிக்க வேண்டும். அப்போது அத்திட்டத்தை நாம் வடக்கிற்கு கொண்டு செல்வோம்.வடக்கு மக்களும் அரசியல்வாதிகளும் அபிவிருத்தியை நிராகரித்தால் அதனை தெற்கிற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். சில அரசியல் வாதிகளும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும் மக்களை வறுமையிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர். அப்போது தான் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதுவே அவர்களது இலக்காகும். அரசாங்கம் அபிவிருத்திகளை பலாத்காரமாக திணிக்காது. மக்கள் நிராகரித்தால் நாம் என்ன செய்வது.?
இராணுவத்தை பயன்படுத்தி பலாத்காரமாக அபிவிருத்திகளை மேற்கொள்ளும் தேவை அரசுக்கு இல்லை. மக்களின் விருப்பத்தின் பிரகாரமே அபிவிருத்திகளை மேற்கொள்வோம். வடக்கில் பருத்தித்துறையில் விசாலமான மீன்பிடித்துறைமுகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றார்.