எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)
எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் விளங்குவோம் என்ற உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
15-வது சட்டமன்ற பேரவைக்கு புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் ஆகியோரைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது:
''பேரவைத் தலைவரே! ஒரு நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக விளங்குவது சட்டமன்றம் தான். தமிழக சட்டமன்றம் ஜனநாயகம் தழைத்தோங்கும் சட்டமன்றமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழக சட்ட மன்றத்தின் சபாநாயகராக தாங்கள் ஒருமனதாக மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப் பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சபாநாயகர், தாங்கள் தான் என்ற பெருமை தங்களை வந்தடைந்திருப்பது மற்றுமொரு மகிழ்ச்சி. எனவே எனக்கு இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
இதே போன்று, 1984 ஆம் ஆண்டிற்கு பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எனது தலைமையிலான அதிமுகவுக்கு கிடைத்து இருக்கிறது.
" 'ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதில் ஒரு பக்கம் சரியாக இருந்து, மறுபக்கம் சிதைந்து போயிருக்குமேயானால் அந்த நாணயம் செல்லாக் காசாகி விடும்' " என்றார், அண்ணா. அண்ணாவின் பெயரை கட்சியிலேயும், அண்ணாவின் உருவத்தை கொடியிலேயும் தாங்கிக் கொண்டுள்ள கட்சி அதிமுக.
எனவே, அண்ணாவின் கொள்கைக்கு ஏற்ப, எம்.ஜி.ஆரின் வழியில் ஜனநாயக நெறிமுறைகளை கட்டிக் காக்க நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகளும் தங்களுடைய கடமையையும், பொறுப்பினையும் உணர்ந்து, மக்களுக்குப் பயன்படக் கூடிய ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மாமன்றத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால், எந்த அளவுக்கு இந்த மன்றம் புகழோடும், பேரோடும் நிலை பெற்று இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
புலுசு சாம்பமூர்த்தி, ஜே. சிவசண்முகம் பிள்ளை, என். கோபால மேனன், டாக்டர் யு. கிருஷ்ணா ராவ், எஸ். செல்லபாண்டியன், டாக்டர் கா. காளிமுத்து போன்றோர் இந்த மன்றத்தின் புகழ் ஓங்கும் அளவிற்கு மகத்தான பணியினை ஆற்றி இருக்கிறார்கள்.
சென்ட்ரல் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி சபாநாயகராக விட்டல்பாய் பட்டேல் பொறுப்பேற்ற போது, அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவரைப் பார்த்து, "நான் இன்று முதல், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவன் இல்லை. நான் எக்கட்சியையும் சாராதவன். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து துலாக்கோல் போல் சபையை நடத்தக் கடமைப்பட்டவன்"என்று கூறினாராம்.
தாங்களோ கட்சிப் பணியை விட்டு பல ஆண்டு காலம் ஆகிறது. தாங்கள் பேரவைத் தலைவராக இருந்த ஆண்டுகளின் அவை நடவடிக்கைக் குறிப்புகளை படித்துப் பார்த்தாலே, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எந்த அளவுக்கு பேச வாய்ப்பு அளித்தீர்கள்; எந்த அளவுக்கு கனிவோடும், கண்டிப்போடும் நடந்து கொண்டீர்கள்; எந்த அளவிற்கு அவையின் மாண்பினையும், உறுப்பினர்களின் பாதுகாப்பினையும் நிலை நாட்டினீர்கள் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில், நடுவு நிலைமை என்பதை தாரக மந்திரமாக கொண்டு தாங்கள் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தீர்கள். இனி வருங்காலங்களிலும் தங்கள் பணி தராசு முள் போல எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
விட்டல் பாய் பட்டேலின் அணுகுமுறையை கையாண்டவர் தான் இந்தச் சபையின் தலைவராக பணிபுரிந்த ஜே. சிவசண்முகம் பிள்ளை . காங்கிரஸ் கட்சியிலே தீவிரப் பற்று இருந்தாலும் பேரவைத் தலைவரான பிறகு எவ்வாறு நடுவு நிலையோடு செயல்பட முடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர் ஜே. சிவசண்முகம் பிள்ளை. விதிமுறைகளையும், மரபுகளையும் முழுமையாகக் கடைபிடித்து, கண்டிப்புடன் இந்த அவையை நடத்திக் காட்டியவர் ஜே. சிவசண்முகம் பிள்ளை.
இவரைப் போலவே, டாக்டர் யு. கிருஷ்ணா ராவும் இந்தப் பேரவைக்கு பெருமையைச் சேர்த்தவர். விவாதத்திலே சூடு கிளம்புகின்ற நேரத்தில், நகைச்சுவையாக ஏதாவது பேசி சூட்டைத் தணிக்கும் வல்லமை படைத்தவர் டாக்டர் யு. கிருஷ்ணா ராவ் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒரு எளிமையான அணுகுமுறையை கடைபிடித்தவர் டாக்டர் யு. கிருஷ்ணா ராவ்.
ஒருவர் சிறந்த சபாநாயகராக விளங்க வேண்டுமென்றால், ஜே. சிவசண்முகம் பிள்ளையின் கண்டிப்பும், டாக்டர் யு. கிருஷ்ணா ராவின் எளிமையான அணுகுமுறையும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும், ஒருங்கே பெற்றவர் தாங்கள் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.
கயிற்றின் மேல் நடக்கும் வித்தைக்காரர் ஒருவரின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது. ஒருவர் கவனம் என்றார். மற்றொருவர் விழிப்புணர்வு என்றார். இன்னொருவர் பயிற்சி என்றார். ஆனால் பயிற்சியாளரோ, இவை அனைத்தையும் விட முக்கியமானது நடுவு நிலைமை என்றார். ஏனென்றால், இடது பக்கமோ, வலது பக்கமோ எந்தப் பக்கம் சாய்ந்தாலும் கயிற்றில் நடப்பவர் விழுந்து விடுவார் என்றாராம். இந்த அளவுக்கு கடுமையான பணி தான் சபாநாயகர் பணி ஆகும்.
பின்தங்கிய கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதுகலைப் பட்டம் படித்த தாங்கள், இந்த மாமன்றத்திற்கு ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். அன்பிற்கும், எளிமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பாங்கினை தாங்கள் இயற்கையாகவே பெற்று இருக்கிறீர்கள்.
அமைச்சராகவும், துணை சபாநாயகராகவும், சபாநாயகராகவும் திறம்பட பணியாற்றிய அனுபவம் தங்களுக்கு ஏற்கெனவே உண்டு. இந்தப் பணி உங்களுக்கு புதிய பணி அல்ல. எனவே, இந்தக் கடினமான பணியை நீங்கள் செவ்வனே ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்தப் பதவி உங்களை வந்தடைந்ததற்கு காரணம், உங்களுடைய திறமை, உங்களுடைய ஆற்றல், உங்களுடைய அனுபவம் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மாமன்றத்திலே நடக்கவிருக்கும் விவாதங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடிய உறுப்பினர்கள் இருப்பார்கள். நகைச்சுவையுடன் பேசக்கூடிய உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆக்ரோஷத்துடன் பேசக்கூடியவர்களும் இருப்பார்கள். காரசாரமான விவாதங்கள் நடைபெறும். அப்போது எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டாலும், கட்சி மாச்சரியங்களை புறந்தள்ளி, அனைவரையும் ஒரு சேர நினைத்து நடுவராக இருந்து தீர்ப்பு அளிக்கும் பணியினை, தாங்கள் நடுநிலையோடு ஆற்றுவீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தங்களுக்கு பக்கபலமாக, துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் பொள்ளாச்சி வ. ஜெயராமனும், அவையின் விதிமுறைகளையும், மரபுகளையும் நன்கு அறிந்தவர். முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்ற ஜெயராமன் நான்காவது முறையாக இந்தப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், பேரவைத் துணைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் ஜெயராமனுக்கு உண்டு.
குறிப்பாக, எதிர்க்கட்சி வரிசையிலே அமர்ந்து, மக்களுக்காக வாதிட்ட பெருமைக்குரியவர் பொள்ளாச்சி ஜெயராமன். ஐம்புலன்களிலே நா என்பது சுவையறிந்து உண்பதற்கான உறுப்பு மட்டுமல்ல. பேச்சிலும் சுவையைக் கூட்டி பிறருக்கு இன்பத்தை தரக்கூடியது. இந்த நாவன்மைக்கும், கணீர் குரலுக்கும் சொந்தக்காரர் பொள்ளாச்சி ஜெயராமன்.
எனது தலைமையிலான அதிமுகவைப் பொறுத்த வரையில், எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கைக்கேற்ப எங்கள் நடவடிக்கைகளை வகுத்துக் கொள்பவர்கள் நாங்கள் அல்ல. எதிர்க்கட்சிகளின் எண்ணங்களைப் பார்த்து, மக்களின் எண்ணங்களை எவ்வாறு அவர்கள் பிரதிபலிக்கின்றனர் என்று பார்த்து அவர்களின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் விளங்குவோம் என்ற உத்தரவாதத்தை என்னால் அளிக்க முடியும்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப நாங்கள் செயல்படுவோம்.
இந்த சட்டமன்றத்தில் பல கட்சிகள் இடம் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சிக்கும், இங்கே உள்ள எதிர்க்கட்சிகளுக்கும், மக்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு உள்ளது.
அனைத்துத் தரப்பினரின் பாராட்டுதல்களுக்கும் உரியவர்களாக இந்த மாமன்றத்தின் தலைவராக வீற்றிருக்கிற நம்முடைய பேரவைத் தலைவர் ப. தனபாலுக்கும், பேரவைத் துணைத் தலைவராக அமர்ந்திருக்கிற பொள்ளாச்சி வ. ஜெயராமனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை 6-வது முறையாக முதல்வராக்கி என்னை மீண்டும் இரண்டாவது முறையாக தொடர்ந்து முதல்வராக்கிய தமிழக மக்களுக்கும், என்னை இந்த சட்டமன்றத்திற்கு, தேர்ந்தெடுத்து அனுப்பிய ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கும் நன்றி'' என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.