ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியை விரும்பும் தமிழ் மக்கள்! - அரசியலமைப்புக்கான கருத்தறியும் குழு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் சமஷ்டி ஆட்சி முறையை தமிழ் மக்கள் விரும்புவதாக, லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய அரசியல் தீர்வுதான் நிரந்தரமானதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியிருந்தார். அத்துடன், வடக்கு கிழக்கிற்கு தனியான நாடாளுமன்றம் தேவை என வட மாகாண சபையின் யோசனையில் முன்மொழியப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு, வடக்கு கிழக்கு இணைந்த முழுமையான சமஷ்டி முறை அவசியம் என தமிழ் மக்கள் பேரவையும் தமது யோசனையில் கூறியிருந்தது. இவை அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஒற்றையாட்சியுடன் கூடிய சமஷ்டி முறையை தமிழ் மக்கள் விரும்புவதாக மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை வேடிக்கையானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 300 பக்கங்களை உள்ளடக்கிய குறித்த அறிக்கையானது மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசின் தன்மை, அதிகாரப் பகிர்வு, நாட்டின் தேசியக் கொடி, மொழி உரிமைகள் மற்றும் மதத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான 18 பேர் அடங்கிய குழு 24 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் சமார் 4,000 முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
பொதுவாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி தீர்வு தொடர்பில் இந்த அறிக்கையினூடாக அரசின் தன்மை தொடர்பான பரிந்துரையில் மாறுபட்ட ஆலோசனைகள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவி்த்துள்ளனர். குழுவானது தனது அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பரிந்துரை செய்துள்ளதோடு, சமஷ்டி தொடர்பில் எவ்வித விடயங்களையும் தெரிவிக்கவில்லை. கடந்தகால பிரிவினைகளை குறைப்பதற்கு அவசியமான தேவைகளையும் தேசத்தின் ஐக்கியத்தையும் முன்னேற்ற வேண்டுமென்பதை அங்கீகரித்து, ஆட்சிமுறை நிறுவனங்களை வலுப்படுத்தி பரந்த அதிகாரப்பகிர்வை உறுதிசெய்ய வேண்டுமெனவும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.