தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைவதால் இந்த உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தலைவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
நாளை வேட்மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற ஜூன் 3-ம் தேதி கடைசி நாள். அதன்பின்னர் போட்டியிருந்தால் தேர்தல் நடத்தப்படும். இதுபற்றிய முறையான அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும்.
தமிழகத்தில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதி முடிவடைகிறது. சட்டமன்றத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் நிலவரப்படி அ.தி.மு.க. 4 உறுப்பினர்களையும், தி.மு.க. 2 உறுப்பினர்களையும் பெற முடியும். இதற்காக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தி.மு.க. வேட்பாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் மத்திய மின்துறை மந்திரி பியூஷ் கோயல், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஆகியோர் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதவிர முன்னாள் மந்திரி பிரபுல் பட்டேல் (தேசியவாத காங்கிரஸ்), பா.ஜ.க.வின் வினய் சகஸ்ரபுத்தி, விகாஷ் மகாத்மி, சிவ சேனாவின் சஞ்சய் ராவத் ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.