வரி அதிகரிக்கப்பட்டால் அதற்கேற்ப தொலைபேசி, மின்சாரம், நீர் போன்றவற்றின் கட்டணங்களும் உயர்வடையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2016 (திங்கட்கிழமை)
பெறுமானம் சேர் வரி அதிகரிக்கப்பட்டால் அதற்கேற்ப தொலைபேசி, மின்சாரம், நீர் போன்றவற்றின் கட்டணங்களும் உயர்வடையும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்திருக்கும் ஏனைய கருத்துகள் வருமாறு:-
வரி அதிகரித்தால் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதற்கேற்ப அதிகரிக்கும்.
தனியார் சுகாதார சேவைகள், தனியார் பாடசாலைகள் உள்ளிட்ட சகல துறைகளும் கட்டண உயர்வுக்கு உட்படும்.
அதன் பிரகாரம் நிலையான தொலைபேசியொன்றுக்கு விதிக்கப்படும் 2,500 ரூபா கட்டணத்துக்கு மேலதிகமாக 375 ரூபாவும், 1,500 ரூபா நீர்க்கட்டணத்துக்கு மேலதிகமாக 225 ரூபாவும்,
5 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக 750 ரூபாவும் அறவிடப்படும். அத்துடன், தனியார் வைத்திய நிலையங்கள், தனியார் பாடசாலைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட சகல துறைகளும் இந்தக் கட்டண உயர்வைச் செய்தேயாகவேண்டும்.
2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் 11 சதவிகிதமாகவிருந்த வற் வரி 8 சதவிகிதமாகவும், 12.5 சதவிகிதமாகவும் இரு முறைகளாக மாற்றம் செய்யப்பட்டபோதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து வற் வரியை 15 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.
எவ்வாறாயினும், வற் வரி அதிகரிப்பால் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே பெருமளவில் பாதிக்கப்படுவர் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.