நியூயார்க் இசை அரங்கில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2016 (வியாழக்கிழமை)
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தின் தன்னாட்சி பெற்ற நகரில் ஒன்று, மேன்ஹாட்டன். அங்கு யூனியன் சதுக்கம் அருகில் இர்விங் பிளாசா என்ற இசை அரங்கில் நேற்று முன்தினம் பிரசித்தி பெற்ற கிளிப்போர்டு ஜோசப் ஹாரிஸ் ஜூனியர் என்ற இசை கலைஞரின் இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது.
அந்த இசை நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான பேர் அங்கு கூடி இருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அங்கு திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. கூட்டத்தினர் உடனே உயிர் பிழைப்பதற்காக நாலா பக்கமும் சிதறி ஓடினர்.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ஆனார். ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அரங்கை சுற்றி வளைத்து சீல் வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார், என்ன காரணத்திற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.