இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயத்தினால் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்புகிறார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் காயத்தினால் லீட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியினை 3 நாட்களில் தன் வசப்படுத்தியது இங்கிலாந்து அணி. இந்த போட்டியின் முதல் இன்னிங்கில் இங்கிலாந்து அணியில் அதிக ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை ஆட்டமிழக்க செய்தவர் சமீரா.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றில், சமீரா இன்று காலை எம்.ஆர்.ஐ./சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவரின் கீழ் முதுகில் காயம் ஏற்பட்ட அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர் நான்கு மாதங்கள் வரை சிகிச்சை மற்றும் ஓய்வு பெற வேண்டும் என மருத்துவ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக விளையாடும் மற்றொரு வீரரை அணி நிர்வாகம் வெகு சீக்கிரம் அறிவிக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாத்திற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான குசால் பெரேராவும் சிகிச்சை பெற்று வருகிறார் என வாரியம் தெரிவித்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்டில் வருகிற வெள்ளி கிழமை தொடங்குகிறது.