கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகையாக 53 வயதான பிலிப்பைன்ஸ் நடிகை ஜேக்லின் ஜோஸ் தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கடந்த 69 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.
அவ்வகையில், இந்த (2016) ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளுக்கான தேர்வுக்குழு நடுவராக 'மேட் மேக்ஸ்' புகழ் இயக்குனர் ஜியார்ஜ் மில்லர் நடுவராக செயல்பட்டார். திருவிழாவின் முதல் படமாக, வுடி ஆலனின் ‘கேஃப் சொசைட்டி’ திரையிடப்பட்டது.
79 வயதான கென் லோச், ‘ஐ டேனியல் பிளேக்’ படத்திற்காக ‘தங்கப்பனை’ விருது பெற்றார். இதன் மூலம் கேன்ஸ் விழாவில், இரண்டு முறை ‘தங்கப்பனை’ விருது வென்ற 9 இயக்குனர்கள் பட்டியலில் கென் லோச்சும் இணைந்து இருக்கிறார். இதற்குமுன். 2006-ம் ஆண்டு ‘தி விண்ட் தட் ஷேக்ஸ் தி பார்லி’ படத்திற்காக கென் லோச் ‘தங்கப்பனை’ விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய இயக்குனர் அஸ்கார் ஃபர்காடி இயக்கிய ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என இரு விருதுகளைத் தட்டி சென்றது. சிறந்த நடிகைக்கான விருதினை ‘மா ரோசா’ என்ற பிலிப்பைன்ஸ் மொழி படத்தில் நடித்த ஜேக்லின் ஜோஸ் (52) தட்டிச் சென்றார்.
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு. போலீசாரிடம் பிடிபட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் பெண்ணாக ஜேக்லின் ஜோஸ் ‘மா ரோசா’ படத்தில் நடித்தமைக்காக இந்த விருதுக்கு இவர் தேர்வாகியுள்ளார். அதிகமான எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்த ‘இட்'ஸ் ஒன்லி தி எண்ட் ஆஃப் தி வோர்ல்ட்’ என்ற திரைப்படம் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்றது.