அமெரிக்க ராணுவ ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமான தாக்குதலில் பலியானார்.
கடந்த 1990 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்தினர். அப்போது பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் மட்டுமே தலிபான் ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்தன.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து 2001 செப்டம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க கூட்டுப்படை போர் தொடுத்து தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அன்று முதல் இன்று வரை சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தலிபான்கள் முயன்று வருகின்றனர்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படை 2015-ல் வாபஸ் பெறப்பட்டது. எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். அவர்கள் தரைவழி தாக்குதலை கைவிட்டு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தலிபான், அல்-காய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
புதிய தலைவரும் பலி
தலிபான் தலைவராக இருந்த முல்லா ஒமர் கடந்த 2013-ல் நடந்த அமெரிக்க ராணுவ தாக்குதலில் உயிரிழந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 ஜூலையில் அவரது மரணத்தை தலிபான் தீவிரவாதிகள் பகிரங்கமாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் முல்லா அக்தர் மன்சூர் என்பவர் தலிபான்களின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அவர் பதுங்கியிருப்பதை அமெரிக்க உளவுத் துறையினர் உறுதி செய்தனர். அவரது நடமாட்டத்தை தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.
உளவுத் துறை தகவலின்படி பாகிஸ்தானின் குவெட்டா நகர் அருகே தால் பண்டின் பகுதியில் நேற்றுமுன்தினம் சென்று கொண்டிருந்த ஒரு காரை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த காரில் பயணம் செய்த தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார். அவரின் மரணத்தை ஆப்கானிஸ்தான், மற்றும் அமெரிக்க உளவுத் துறையினர் உறுதி செய்துள்ளனர்.