இலங்கை அணிக்கெதிரான 2-வது போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஆண்டர்சனின் பந்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி இன்னிங்சை தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்சில் 91 ரன்னில் சுருண்ட இலங்கை அணி, 2-வது இன்னிங்சில் 119 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் முதல் இன்னிங்சில் 298 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து இன்னிங்ஸ் மட்டும் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி 3 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சை விளையாடும் போது அந்த அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்கள் எடுத்தார். 7 ஓவர்கள் பந்து வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
2-வது நாள் அவர் பந்து வீசும்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அடுத்த நாள் காலையில் களம் இறங்கினார். ஆனால், அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் உடனடியாக வீரர்கள் அறைக்குச் சென்றார். இதனால் அவர் 27-ந்தேதி நடக்கும் 2-வது டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து அணி கேப்டன் அலைஸ்டர் குக் கூறுகையில் ‘‘2-வது டெஸ்டிற்கான அணியில் ஸ்டோக்ஸ் இடம்பெறுவார். ஆனால், போட்டியில் பங்கேற்பது கடினம்தான். இருப்பினும், மருத்துவக்குழு அவரது காயம் குறித்து உறுதியாக ஏதும் கூறவில்லை. ஸ்டோக்ஸ் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதன்பின்தான் முழு விவரம் தெரியும்’’ என்றார்.