'கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மீண்டும் 6 சிக்சர் அடிப்பேன்' என்று இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் 34 வயதான யுவராஜ்சிங் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மறக்க முடியாத சாதனை ஒன்று அவரது வசம் உள்ளது. 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் விளாசி புதிய சரித்திரம் படைத்தார்.
2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஹீரோவாக ஜொலித்த யுவராஜ்சிங் அதே ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். வெளிநாட்டில் சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து குணமடைந்த யுவராஜ்சிங் மறுபடியும் கிரிக்கெட்டில் வெற்றிகரமான வீரராக வலம் வருகிறார். அதே சமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாமல் புற்றுநோய் விழிப்பு உணர்வு முகாமில் கலந்து கொண்டு ஊக்கப்படுத்த தவறுவதில்லை.
இந்த நிலையில் மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட 17 சிறுவர்-சிறுமிகளை சந்தித்து யுவராஜ்சிங் உரையாடினார். அப்போது, "புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மனம் துவண்டு விடக்கூடாது. மனஉறுதியுடன், நம்பிக்கையோடு போராடினால் அதில் இருந்து மீண்டு மறுவாழ்வு பெறலாம்’ என்று பயனுள்ள ஆலோசனைகள் யுவராஜ் வழங்கினார்.
அப்போது ஒரு சிறுவன், ‘மீண்டும் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிப்பீர்களா?’ என்று கேட்டான். அதற்கு யுவராஜ்சிங், ‘நீ எனக்காக பிரார்த்தனை செய். நான் மீண்டும் 6 சிக்சர்கள் அடிப்பேன்.’ என்று உற்சாகமாக பதில் அளித்தார்.
மேலும் யுவராஜ்சிங் கூறும் போது, ‘அச்சாதனையை செய்து பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எப்படி 6 சிக்சர்கள் அடித்தேன் என்று இப்போது தெரியவில்லை’ என்றார்.
ஒன்றரை வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் 8 வயது சிறுவன் ஒருவன் கூறும் போது, ‘யுவராஜ்சிங் போன்ற வீரர் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கிறார். எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னாவின் ஆட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியில் மிதப்பேன்’ என்றான்.