முன்னிலை சோசலிசக் கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போன விவகாரம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றில் நேற்று ஆஜராகியிருந்தார்.
லலித், குகன் காணாமல் போனமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை யாழ். நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றது.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி யாழ். நகரில் வைத்து லலித் மற்றும் குகன் ஆகிய இரு இளைஞர்களும் இனந்தெரியாத கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.
முன்னைய ஆட்சியின் போது நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது லலித், குகன் உயிருடனேயே இருப்பதாக அப்போது ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
இந்த வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவை சாட்சியாகப் பதியுமாறு முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்த மேலதிக சாட்சி வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல யாழ். நீதிமன்றில் ஆஜரானார்
அதன்போது சாட்சியமளிக்கையில், பாதுகாப்பு அமைச்சு கூறிய கருத்துக்களை தான் கூறியதாகவும், அதைவிட வேறு என்ன தெரிவித்தேன் என்பது பற்றி ஞாபகம் இல்லை என்றும் அவர் அவர் கூறினார்.
சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சசிதரன் ஒத்திவைத்தார்.