புரெவி புயல்: குமரி கடல் நோக்கி நகருவதால் கடலோர மாவட்டங்களில் உஷார் நிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2020 (புதன்கிழமை)
இலங்கையின் கிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்வதாக அந்நாட்டின் இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையை கடக்கும்வரை புயலாகவே காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் கூறுகிறது.
வங்காள விரிகுடாவில் உருவாகும் பெருமளவிலான புயல்கள், இலங்கைக்கு அருகே மையம் கொண்டவாறு இந்தியாவை நோக்கி நகரும். ஆனால், புரெவி புயல், இலங்கைக்குள் 20 வருடங்களுக்குப் பிறகே ஊடுருவி தமிழகம் நோக்கி நகருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இலங்கைக்குள் புயல் ஒன்று ஊடுருவிச் சென்றது. தற்போதைய புரெவி புயலும் அதை ஒத்ததாகவே காணப்படுவதாக மொஹமட் சாலிஹின் குறிப்பிடுகிறார்.
இலங்கையை கடக்கும் வேளையில் மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடம் என்றும் அதேவேளை, குறிப்பாக இலங்கையின் கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 200 மில்லிமீட்டர் வரை மழையும் நாட்டின் பிற பகுதிகளில் 100 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகலாம் என்றும் இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதேபோல வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த புயலின் தாக்கம் காணப்படும் என அவர் கூறுகிறார்.
இதற்கிடையே, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்த புயல் பாதிப்பு அதிகம் என்பதனால், கடற்றொழிலாளர்கள் (மீனவர்கள்) மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் என்ன நிலவரம்?
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல் வியாழக்கிழமை குமரிக் கடல் பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புரவி புயலால் பாதிக்கப்படும் இடங்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநிலத்துக்கு தேவைப்படும் உதவிகளை இயன்ற அளவுக்கு செய்வதாக அப்போது உறுதியளித்ததாக பிரதமர் மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க் கிழமை இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் இன்று பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை இரவு இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக புதன்கிழமை ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்து வருகிறது.
விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
வியாழக்கிழமையன்று சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இந்த புரெவி புயலால் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் இன்று மாலை முதல் நாளை காலை வரை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்யுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வர மீனவ குடும்பங்கள் இடமாற்றம்
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் அடுத்த சில மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3ஆயிரம் விசைப்படகு மற்றும் 6ஆயிரம் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
புரெவி புயலின் காரணமாக பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய வடக்கு கடற்கரை பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் முதல் தொடர் கன மழை பெய்து வருவதால் புதன்கிழமை பகல் 3 மணிக்கே இரவு 7 மணி போல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
மீனவர்கள் தங்களது படகுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கிலிருந்து தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள குந்துகால் துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் கடல் சீற்றத்தின் போது மண்டபம் வடக்கு கடற்கரைப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று காற்றின் வேகம் காரணமாக சேதமடைந்து கரை ஒதுங்கி உள்ளது.
புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கம்பிபாடு ஆகிய தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மீனவர்களை ராமேஸ்வரம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் காவலர்கள் மக்களை அப்புறபடுத்தி பாதுகாப்பாக புயல் காப்பகங்களில் தங்க வைத்தனர்.
தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மீனவர்கள் தங்களது உடைமைகள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நாட்டுப்படகு உரிமம் மற்றும் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளான கிளி, நாய் உள்ளிட்டவைகளை தூக்கி கொண்டு வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் தங்கி இருந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு அரிச்சல்முனையில் புதிதாக அமைக்கப்பட்ட வளைவு சேதமடைந்து ஒரு பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது.
புரெவி புயல் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சேது விரைவு ரயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலியர், மாவட்ட நிர்வாகம் சார்பில் புரெவி புயலின் போது கன மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிதில் மழைநீர் தேங்கும் பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடங்கள் உட்பட திருமண மண்டபங்கள், பள்ளி கட்டடங்கள் என 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயலால் மரங்கள் சாயும் பட்சத்தில் உடனடியாக சீர் செய்ய 98 எண்ணிக்கையில் உயர் மின் அழுத்த மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு பணிகளுக்காக 324 ஜேசிபி இயந்திரங்கள், 24 உயர் மின் அழுத்த தண்ணீர் உறிஞ்சு பம்புகள், 16,800 மணல் மூடைகள், 3,563 மின்கம்பங்கள், 1,020 சவுக்கு மரக்கட்டைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குழுக்களாக பிரிந்து மண்டபம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் 40 பேர் முகாமிட்டுள்ளனர் என்றார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் இன்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு பணிக்கு தயாராக வைத்திருந்த உபகரணங்களை பார்வையிட்டார்.
இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட வடகிழக்கு பருவமழை கணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், ஆகியோர் புரெவி புயல் காரணமாக கடற்கரை ஒட்டிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார, புரெவி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி, புரெவி புயலின் வீரியத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
புயல் வருவதற்கு முன்னரே முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உயிர் மற்றும் பொருட்சேதம் இன்றி புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் முழுவீச்சில் முனைப்புடன் தயாராக உள்ளன. நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண் மீட்பு குழுக்கள் அணிவகுப்பு நடத்தி புயல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடையே அச்சம் போக்கி வருகின்றனர். தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல் வரும் போது முதல்வர் சூறாவளியாக சுழன்று நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என்றார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலியர்.
தூத்துக்குடியில் உஷார் நிலை
புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் புரெவி புயலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் தேவை ஏற்பட்டால் கப்பல் தளங்களிலுள்ள கப்பல்கள்; ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்படும் என்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான 23 கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கடற்கரையில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர், கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
புரெவி புயலுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்: புரெவி புயலால் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் 40 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர்.
36 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. 63 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மின்சாரம் ,கழிப்பறை வசதி மட்டுமல்லாது முக கவசத்துடன் மருத்துவ வசதி செய்யபட்டுள்ளது.
நடுக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 72 படகு மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 64 படகுகள் கரைக்கு திரும்பியுள்ளன.எஞ்சியுள்ள படகுகள் இன்று இரவுக்குள் கரை திரும்புவார்கள்.
தாமிரபரணி நதி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.